இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் தங்களது பாரம்பரிய மத உடைகளை அணிவதற்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஒப்புதலுடன், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான துறைசார் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொண்டு, சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி 2026 ஒக்டோபர் 20 ஆம் திகதியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது, அவரது காவி உடையைக் களைவது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
பௌத்த விவகாரத் திணைக்களம், சம்பந்தப்பட்ட நிக்காய அல்லது மகாசங்கப் பிரிவுக்கு அறிவித்து, 10 நாட்களுக்குள் அவர்களின் தீர்மானத்தை சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.
குறித்த 10 நாட்களுக்குள் உரிய தரப்பிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால், நடைமுறையிலுள்ள சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய ஆணையாளர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்திற்கோ அல்லது பிற தேவைகளுக்காகவோ சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, தங்களது பாரம்பரிய காவி உடைகளை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் பௌத்த பிக்குகளுக்கு மட்டுமன்றி, சிறையில் அடைக்கப்படும் ஏனைய மதங்களின் மதகுருமார்களுக்கும் அவரவர் மத உடைகள் தொடர்பான விடயங்களில் பொருந்தும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




