கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்தி அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உத்தரவு அண்மையில் நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தால், இந்தப் போராட்டம் தொடர்ந்து அங்கு நடைபெறுவதற்கு எந்தவித வாய்ப்பும் இருந்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவது அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும் என்றும், அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பொலிஸ்மா அதிபரும் பொலிஸாரும் மக்களின் பொலிஸாகச் செயற்படாமல், பெலவத்தையில் உள்ளவர்களின் பொலிஸாகச் செயற்படுவதாகவும் மைத்திரி குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸாருக்கு நீதிமன்ற உத்தரவு இருக்குமானால், அதனைச் செயற்படுத்திக் காட்டுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.




