இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தம் நாளை (31) மேற்கொள்ளப்படவுள்ளது.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (30) உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
- WTI மசகு எண்ணெய்: பீப்பாய் ஒன்றின் விலை 102.03 அமெரிக்க டொலர்கள்.
- BRENT மசகு எண்ணெய்: பீப்பாய் ஒன்றின் விலை 115.01 அமெரிக்க டொலர்கள்.
- MURBAN மசகு எண்ணெய்: பீப்பாய் ஒன்றின் விலை 114.08 அமெரிக்க டொலர்கள்.
இதற்கிடையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களான லங்கா IOC மற்றும் சினோபெக் (Sinopec) ஆகியவை அண்மையில் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலையை 20 ரூபாவால் அதிகரித்திருந்தன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக, குறித்த தனியார் எரிபொருள் நிறுவனங்கள் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையை அதிகரித்திருந்தன.
இதன்படி, முன்னர் 475 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) எரிபொருள் விலைகளைத் திருத்தியிருந்தது.
இந்நிலையில், எரிபொருள் விலைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது.




