எதிர்வரும் திங்கட்கிழமை (30) அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நவம்பர் 30ஆம் திகதி பரீட்சைகள் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நாளாகும். எனவே, அன்றைய தினம் நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தைத் தவிர, ஏனைய அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.




