பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீடுகள் காரணமாக தற்போது மத மற்றும் சமூக ரீதியில் பாதகமான சூழல் உருவாகியுள்ளதாகப் பிரபல வர்த்தகரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிக்குகளின் அரசியல் தலையீடுகள் தொடர்பாக இந்நாட்களில் வெளியாகும் செய்திகளைப் பார்ப்பதே வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அரசியலுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட ஒருவர் எனக் குறிப்பிட்ட டட்லி சிறிசேன, சமூகத்திற்கு நல்வழிகாட்டி, சிறந்த ஆலோசனைகளை வழங்கி சமூகத்தைச் சரியான பாதையில் வழிநடத்தும் மதிப்புமிக்க, ஒழுக்கமுள்ள மற்றும் பக்தி நிறைந்த பிக்குகள் பெரும்பான்மையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மற்றுமொரு தரப்பினர் அரசியல் அணிகளுடன் இணைந்து செயற்படுவதன் காரணமாக நாட்டில் மத மற்றும் அரசியல் ரீதியில் அழிவுகரமான சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக பௌத்த மதமும் மதத்துறையும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், பிக்குகளின் அரசியல் உரிமைகள் மற்றும் அவர்களின் அரசியல் தலையீடுகளால் சமூகத்தில் ஏற்படும் பிளவுகள் தொடர்பாக அரசாங்கம் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக உரிமைகள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பில் புதிய அரசாங்கம் சட்டங்களை இயற்றி வரும் பின்னணியில், மதப் பொறுப்புகளைச் சுமந்துள்ள பிக்குகளின் அரசியல் தலையீடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என டட்லி சிறிசேன மேலும் வலியுறுத்தியுள்ளார்.




