– உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை
நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறும் வரி செலுத்துவோர், வருமானம் எதுவும் இல்லாதிருந்தாலும் ரூ.50,000 முதல் ரூ.400,000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நவம்பர் 30ஆம் திகதி என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
குறித்த காலக்கெடுவைத் தவறவிடுபவர்கள் நடைமுறையிலுள்ள வரிச் சட்டங்களுக்கு அமைய தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த மதிப்பீட்டு ஆண்டில் எவ்வித வருமானமும் ஈட்டியிருக்காவிட்டாலும், சட்டப்படி வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறினால் குறைந்தபட்சம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்தத் தொகை அதிகபட்சமாக ரூ.400,000 வரை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான நிலுவை வருமான வரியைச் செலுத்த வேண்டிய பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோருக்கும், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி செலுத்த வேண்டியவர்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அறிவித்தல்களை அனுப்பியுள்ளதாக நந்தன குமார தெரிவித்துள்ளார்.
எனவே, அபராதங்கள் மற்றும் மேலதிக கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக உரிய காலக்கெடுவுக்குள் வரி அறிக்கைகளைச் சமர்ப்பித்து, வரிகளைச் செலுத்துமாறு அவர் வரி செலுத்துவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான வரி விதிமுறைகள்
இதற்கிடையில், ரொக்கப் பணப் பரிவர்த்தனைகள் காரணமாக வரிச்சுமை அதிகரிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் நந்தன குமார விளக்கமளித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகளை, வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது செலவுக் கழிவுகளாகக் கோர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் காணிகளை கொள்வனவு செய்தவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




