தாம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஒருபோதும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
‘ரது இர’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளின் தேவைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடவில்லையா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாங்கள் தொழிற்சங்க இயக்கமாக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர், அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்குத் தயாராகுவோமே தவிர, வரவு செலவுத் திட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான அடிப்படை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்படும் போதே உருவாகிறது. அந்த முன்மொழிவுகளிலேயே கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மாறாக, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிப்பதால் அவற்றை மாற்ற முடியாது.”
மேலும், மேலதிக கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டுமாயின் புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் அல்லது ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மூலதனச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நிதி ஒதுக்கீடுகள் மாற்றப்பட்டால் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி மற்றும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு போன்ற துறைகள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரச ஊழியர்களை வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பதாக சிலர் கூறினாலும், அண்மையில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.




