இன்று பல பேர் நம் வீடுகளில் இன்வர்டர் பேட்டரி வைத்திருக்கின்றோம். அவற்றை மாற்றும்பொழுதோ அல்லது சரியாக பராமரிக்கா விட்டாலோ, அவை எவ்வாறு சுற்று சூழலை பாதிக்கின்றன தெரியுமா?
பேட்டரிகளில் உள்ள ஈய அமிலம் (lead acid) சரியாக கையாளப்படாவிட்டால், மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தரையில் சிந்தும் சிறிதளவு ஈயம் கூட சுற்றுச்சூழலில் கலக்கிறது. இதுவே மாசுக்கு முக்கிய காரணமாக மாறுகிறது.
சர்வதேச அளவில் ஈயத்தால் இந்தியாவில் தான் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
"கருவில் உள்ள குழந்தைகள், ஐந்து வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ஆபத்து. வாழ்நாள் முழுவதும் நரம்பு பாதிப்பு, அறிவாற்றல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்", என்று விவரிக்கிறது இந்த ஆய்வு.
பேட்டரி மட்டுமல்லாது, விளையாட்டுப் பொருட்கள், மின்சார கழிவுகள், சுரங்கத் தொழில், கலப்படமான மசாலா பொருட்கள் மற்றும் பெயிண்ட் இவையெல்லாம் ஈயத்தின் முக்கிய தோற்றுவாயாக உள்ளன. இங்கிருந்து தான் ஈயம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
எந்தவொரு பொருளும், முறையான பாதுகாப்புடன் மறுசுழற்சி செய்யப்படுவதும், சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுமே, நம் வருங்கால சந்ததியை இத்தகைய மாசுகளில் இருந்து காப்பாற்ற முடியும்.
இதனை இல்லத்தரசிகள் தெரிந்திருப்பது அவசியமான ஒன்றாகும்.