web log free
March 28, 2024

பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்...

30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது. இதற்கான காரணத்தையும் செய்ய வேண்டிய சிகிச்சை முறையையும் அறிந்து கொள்ளலாம்.
நாள்பட்ட சோர்வு நோய் என்பது எப்பொழுதும் அசதியாக இருக்கும். பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும். ஆனால், இந்த வகையான அசதி தூங்கினாலும் சரியாகாது. இதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்றே நவீன மருத்துவம் கூறுகிறது. ஒரு சில வைரஸ்கள் இதற்குக் காரணமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை. மன அழுத்தம், குடும்பச் சூழ்நிலை, வேலையில் விருப்பமின்மை போன்ற காரணங்களாலும் இந்த வகையான அசதி ஏற்படலாம். 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது.

புளூ காய்ச்சலை போன்ற அறிகுறிகளே இதில் தெரிகின்றன. தசை வலி, தலைவலி, அதீத சோர்வு போன்றவை 6 மாதங்களுக்கு மேல் இதில் நீடித்திருக்கலாம். உடற்பயிற்சி செய்தாலும் சோர்வு வரும். காலை எழுந்தவுடன் அசதியாக காணப்படும். மறதி ஏற்படும், மனதின் ஒருமுகத்தன்மை குறையும், குழப்பம் வரும், மூட்டு வலி வரும். ஒரு சிலருக்குத் தொண்டை வலியும் வரும்.

இந்த வகை அசதிக்கு என சிறப்புப் பரிசோதனைகள் ஒன்றும் இல்லை. நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு போன்ற பரிசோதனைகளே இதற்கும் செய்யப்படுகின்றன. இவர்களுக்கு தைராய்டு, இதயம், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, மனச் சோக நோய் உள்ளதா, ஏதாவது கட்டிகள் உள்ளனவா என பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். வெள்ளையணுக்கள், மூளை எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகளும் செய்வதுண்டு. பலருக்கு மனச்சோக நோய் இருக்கும். எதிலும் ஆர்வமின்மை, படுக்கையில் இருந்து எழுந்திருக்க விருப்பம் இல்லாமை, சாப்பாட்டில் விருப்பமின்மை அல்லது அதிகமாக சாப்பிடுதல் போன்ற செயல்களை செய்வார்கள்.

மிகை அசதியால் சோர்வாக இருப்பவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும், ஒய்வையும், தூக்கத்தையும் முறைப்படுத்த வேண்டும். ஒரு பெரிய வேலையை, சிறிது சிறிதாக பிரித்து செய்வதற்கு பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது. சிலருக்கு சோகம், அவர்களுடைய குடும்ப சூழ்நிலையால் ஏற்படுகிறது. மனம் விட்டுப் பேசுவதால், இதை படிபடியாகக் குறைக்க முடியும்.

கிராம்பு, நிலவேம்பை சம அளவு எடுத்துத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும். ஒரு டம்ளர் அன்னாசி பழச் சாற்றுடன் மிளகுத்தூள் சேர்த்துத் தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.