‘பாகுபலி’ படத்துக்கு அடுத்து ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். என்ற இரு முன்னணி தெலுங்கு நாயகர்களை இயக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடங்கியது.
கதை விஜயேந்திர பிரசாத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், கிராபிக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி, வசனம் சாய் மாதவ் புரா - கார்க்கி, திரைக்கதை மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்று படத்தின் தொழில்நுட்பக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமெளலியின் முதல் எழுத்தைச் சேர்த்து இப்படி அழைத்து வருகின்றனர்.
‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் போல் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இது இருக்கும் என்கிறார்கள்.
தற்போது தெலுங்கில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை, தமிழ், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.