படப்பிடிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
வங்காள சின்னத்திரை உலகில் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படுள்ளன. இதையடுத்து மேற்படி கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்கத்திலும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜூன் 1 முதல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது மேற்கு வங்க அரசு.
படப்பிடிப்பு தொடர்பாக சின்னத்திரையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொலைக்காட்சி அதிகாரிகள் இடையே கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாதிப்பு இல்லாதவாறு படப்பிடிப்பை எப்படி நடத்துவது என விவாதிக்கப்பட்டது. நெருக்கமான காதல் காட்சிகள், முத்தக் காட்சிகளைப் படமாக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கேமரா அருகே நடிக்க வரும்போது மட்டும் தான் நடிகர்கள் முகக்கவசத்தை எடுக்கவேண்டும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் படப்பிடிப்பில் அனுமதிக்கக் கூடாது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூட்டம் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.