web log free
December 04, 2024

ஒரு வருடம் அவருடன் உறவில் இருந்தேன்- நீதிமன்றில் பகீர்

நடிகர் சுசாந்த் சிங்கும் தானும் லின் இன் உறவில் இருந்ததாக நடிகை ரியா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.

நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாட்னா காவல்துறையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் அளித்துள்ளார். சுசாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகாரில் கூறியுள்ளதாவது: சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான ரூ. 1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுசாந்திடமிருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் திருடி விட்டார்கள். மேலும் சுசாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாட்னா காவல்துறை பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா மனு செய்துள்ளார். சுசாந்த் சிங் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்புப் பதிலைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரியா குறிப்பிட்டுள்ளதாவது: 2012 முதல் நான் நடித்து வருகிறேன். சுசாந்தின் தந்தை தவறான முறையில் இந்த வழக்கில் என்னை தொடர்புபடுத்தியுள்ளார். சுசாந்த் சிங்குடன் கடந்த ஒரு வருடமாக லிவ் இன் உறவில் இருந்தேன். ஜூன் 8 அன்று முதல் மும்பையில் உள்ள என் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். அவருடைய மறைவால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. சுசாந்த் மரணத்தில் அவருடைய தந்தை புகார் அளித்தது போல சிறிதளவு உண்மை இருந்தாலும் பாந்த்ரா காவல் நிலையத்தில் தான் இந்த வழக்கு விசாரிக்கப்படவேண்டும். பிகாரில் நடுநிலைமையான விசாரணை நடைபெறாது. எனவே இந்த வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Last modified on Monday, 03 August 2020 05:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd