web log free
November 24, 2024

அழகு என்பது ஒரு வெளிப்பாடு..!

இன்றுச்சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக திருமண வயதை எட்டுவதற்குள் பெண் குழந்தைகளை வெண்ணிறமாக்க வேண்டும் என்பதே இவர்களதுலட்சியம். வெண்மை நிறமும், அடர்த்தியான கூந்தலும், எடுப்பான தோற்றமும் திருமணப்பெண்ணின் முக்கிய தகுதிகள் என்பது சமுதாயத்தின் நிலைப்பாடு. திருமணத் தேடல் தளங்களை அலசினால், தங்கள் மகனுக்கு வெண்ணிற மங்கை வேண்டும்; வெண்ணிற மங்கைக்கு தக்க வரன் வேண்டும் என பெற்றோர் தேடுவதை கண்கூடாக காணலாம்.

♦மலையக மைந்தன் சிவா 

இக்கட்டுரையை நாம் தொடர்ந்து,பார்ப்பதற்க்கு முன்பதாக எனது பார்வையில் எது உண்மையான அழகு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.நான் பார்க்கும் அழகு இதுதான்......

அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்;அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்;அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்;அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்.எது அழகு ?சிவந்த நிறமா? கூறான மூக்கா? வேல்போன்ற விழிகளா? வனப்பான உடல் அமைப்பா? வண்ண,வண்ண உடைகளா? வித விதமான சிகை அலங்காரங்களா? விலை உயர்வான நகை அலங்காரங்களா?இவைகளெல்லாம் அழகுதான். ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல.

குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.

அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு.

மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.

தொழிலில் அறத்தையும்,

நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் அழகு.கையூட்டு வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககாரர்கள் அழகு.பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.

பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.

சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.

சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.

பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு.இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்.நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.

தொடர்ந்து எனது பார்வையில்.....உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

கருமை நிற கண்ணா... உனை காணாத கண் இல்லை... போற்றாத வாயில்லை...'' என, கருப்பின் அழகை வருணித்து இறைவனை போற்றி பாடுகிறோம். கருப்புத்தோல் கொண்ட எகிப்திய ராணி கிளியோபாட்ரா, 'உலக அழகி' என்று போற்றப்பட்டவர்.ஆனால், நமது சமுதாயத்தில் கருமை நிற பெண் நிலை வேறு. 'கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு...' என கூறுவது வெளிவேஷம். கருப்பு நிற சிறுமியருக்கு, சமூகத்தில் அநீதியே இழைக்கப்படுகிறது. கருப்பாக பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், சருமத்தை ஒளிரச் செய்வதற்கும், அழகு சாதன நிபுணர்கள் மற்றும் தோல் மருத்துவர்களை, பெற்றோர் நாட ஆரம்பித்துள்ளனர்.

 ''கருப்பு நிற பெண்கள் மீதான பாரபட்சம் பள்ளியில் இருந்தே துவங்கி விடுகிறது. சிவப்பு நிறமுடைய பெண்கள், பொதுவாக ஆசிரியர்களின் செல்லமாக இருப்பார்கள். கருப்பாக இருப்பவர்கள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்; அவமதிப்பை சந்திக்கின்றனர். வாழ்க்கையின் கடைசி வரை, நிறம் குறித்தபுனைப் பெயருடன் அவர்கள் வலம் வருவர்.''பெண்களின் நிறத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, 'டிவி' விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.

இந்த, 2021ம் நுாற்றாண்டில், மக்கள் நிறம் குறித்த பிற்போக்கு மனப்பான்மை கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ''குழந்தைகள் தங்கள் இயற்கையான உடல் அமைப்புடன், நம்பிக்கையுடன் வசதியாக இருப்பதை உறுதி செய்வதே பெற்றோரின் முக்கிய பொறுப்பு.

நடிகைகள் பலர் தங்கள் தோல் நிறம் காரணமாக எவ்வாறு பாகுபாடு காட்டப்படுகின்றனர் என்பது பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.''ஒரு கிரீம் விளம்பரத்தை வேண்டாம் என்று நடிகை சாய் பல்லவி கூறியபோது, அது ஒரு பெரிய செய்தியாக பேசப்பட்டது. திரைப் பட நட்சத்திரங்கள் பெரும்பாலும், யதார்த்தத்துடன் ஒவ்வாத தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதே வழக்கம்,'' 

அழகு என்பது எங்கே இருக்கிறது? எந்த உருவம் அழகானது? எந்த உருவம் அழகற்றது? என்ற கேள்வி உங்களுள் எழலாம்.உருவம், ஒரு உருவமாகவே இருக்கிறது. அதில் அழகும் இல்லை, அசிங்கமும் இல்லை. நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கும்போது எல்லாமே அழகுதான். நீங்கள் உங்களுக்குள் ஆனந்தம் இல்லாமல் இருக்கும்போது எதுவுமே அழகில்லை. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்கு அடிமையாக உங்கள் மனம் இருப்பதால், குறிப்பிட்டவிதமான உருவங்கள் அழகாகவும் மற்றவை அழகற்றும் தெரிகிறது.

நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கும்போது எல்லாமே அழகுதான். நீங்கள் உங்களுக்குள் ஆனந்தம் இல்லாமல் இருக்கும்போது எதுவுமே அழகில்லை.உங்கள் குழந்தை, உங்களுக்கு அழகாகத் தெரிகிறது. ஆனால் மற்றவர்களுக்கோ அப்படியில்லை. உங்கள் கடவுள், உங்களுக்கு மிக அழகானவர், வேறு கலாச்சாரத்திலுள்ள மனிதனுக்கு, உங்கள் கடவுள் அசிங்கமானவராக்த் தெரியலாம். எனவே அழகு என்பது கலாச்சாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. இதை மனதின் கட்டுப்பாடு என்றும் சொல்லலாம்.சின்னஞ்சிறு புல்லை எடுத்துப் பார்த்தாலும், அந்தப் புல்லினை உருவாக்கிய சக்தி எதுவாயிருந்தாலும் சரி, அந்தப் புல் மிகுந்த கவனத்தோடு உருவாக்கப்பட்டதை காணமுடியும். படைப்பினை நிகழ்த்தும் சக்தி, ஒரு புல்லைக்கூட எந்த அளவிற்கு ஈடுபாட்டோடும் கவனத்தோடும் உருவாக்கியிருக்கிறது, பாருங்கள்!

அதே அளவு ஈடுபாட்டுடனும் கவனத்தோடும்தான் நீங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். அதேவிதமான ஈடுபாட்டுடன் இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் அழகாகத்தான் பார்ப்பீர்கள், எதுவும் அசிங்கமாகத் தெரியாது.ஈடுபாடு இல்லாததால்தான் அது நமக்கு அசிங்கமாய்த் தெரிகிறது. நம் அனுபவத்தில் எதனோடு முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமோ அது மிகவும் அழகாக இருக்கிறது. அடிப்படையாக நீங்கள் ஓர் ஆனந்தமான மனிதராக இருந்தால் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்.

எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமே அழகான முகம் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பேரானந்தத்தைப் பிரதிபலிக்கும் முகமே பிரகாசமான முகம். நீங்கள் நன்றாகத் தோற்றமளித்தால் ஒரு அழகிய கலைப்பொருளாக இருக்க முடியும், அதற்கு மேல் எதுவும் நடக்காது. சிற்பங்கள், ஓவியங்கள் இவைகள் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றன. அழகாகத் தோற்றமளிப்பது தவறு என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதற்காக எவ்வளவு நேரம் முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் யாரென்பதைத் தீர்மானிக்கிறது.

உங்களுக்குள் நிலையாக ஏதோவொரு தன்மை இருக்குமெனில், உங்கள் தோற்றம் உங்களுக்கு முக்கியமாகத் தெரியாது. அதற்காக, நான் என் தோற்றத்திற்காக சிறிதும் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்லவில்லை. கண்டிப்பாக கவனம் செலுத்துகிறேன். ‘நன்றாக தோற்றமளிக்கிறேனா’ என்பதைவிட ‘எனக்குள் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா’ என்பதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் கவனமும் செலுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

நான் நன்றாகத் தோற்றமளிக்க வாய்ப்பே இல்லாததால், இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும் என்று இப்படி தத்துவம் பேசுகிறேனோ என்னவோ! அப்படி யோசித்தால், தோற்றத்தை சரி செய்வதற்கு டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒன்றும் அது அதிமுக்கியமானது அல்ல. அதனால், இதோ இங்கே உங்கள் முன் இந்த நிலையில் இருக்கிறேன்!

இன்றைக்கு மக்கள், கைகளை எந்நேரமும் தங்கள் முடியிலேயேதான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுக்குள் நிலையான தன்மை எதுவும் இல்லாததே இதற்கு காரணம். உங்களுக்குள் தகுந்த பண்புகளை உருவாக்கிவிட்டால், உங்கள் தலைமுடி எப்படி இருந்தாலும் சரி, மக்கள் உங்களைக் கொண்டாடவே செய்வார்கள். ஒரு நடிகனாகவோ அல்லது யாரோ ஒருவராகவோ இந்த உலகில் நீங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தால், அந்தத் தாக்கம் உங்கள் தீவிரத்தாலும் பண்பாலும்தான் உருவாகுமே தவிர உங்கள் முடியின் அமைப்பால் அல்ல.

அறிவாற்றல், தீவிரம், ஒழுக்கம், குணம், நடத்தை, நடையுடைத் தோற்றம், நளினம், அன்பு, ஆனந்தம், ஆரோக்கியம், சமநிலை, உற்சாகம், ஆகியவற்றின் கலவையே அழகும் 

நேர்த்தியான தோற்றமும். இதனுடன் சில உடல் உறுப்புக்களின் அளவும் வடிவமும் கூட கண்டிப்பாக உள்ளடங்கும். ஆனால், முதலில் குறிப்பிட்ட அனைத்தையும் நீங்களாகவே அடைந்துவிடலாம். கடைசியாக குறிப்பிட்டதற்கு மட்டும் பரம்பரை மரபணுக்களின் உதவியும் கொஞ்சம் பிளாஸ்டிக் சர்ஜரியின் உதவியும் தேவைப்படலாம். அழகைப் பற்றிய ஏதோவொரு குறிப்பிட்ட கருத்தால் கவரப்படாமல், உங்களைக் காண்பவர்கள் அனைவரையும் கவரும் விதமாக நீங்கள் மாறிவிட வேண்டும் என்பதே என் விருப்பம்.

கட்டுரை:மலையக மைந்தன் :சிவா.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd