web log free
May 05, 2024

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்

தாதா சாகேப் பால்கே விருது வரை பெற்று தமிழ் சினிமாவின் தனிச் சிகரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். 71ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் அவரது திரைப்பயணம் குறித்த தொகுப்பு.
 
46 ஆண்டுகளில் 168 படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஒளிரும் ரஜினிகாந்த், 1975-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அவர்களால் அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அபூர்வ நட்சத்திரம் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மிக எளிமையாக அறிமுகமான இவரை, ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' எனும் மகுடத்துடன் இப்போது வரை கொண்டாடி வருகின்றனர்.
 
கர்நாடக போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றிய சமயத்தில், அரசு துறைகளுக்கு இடையே நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியின் நடிப்பை பார்த்து அவருடைய நண்பரும் சக ஊழியருமான ராஜ் பகதூர் சினிமாவில் நடிக்க முயற்சிக்கும்படி வலியுறுத்த, அதனைத் தொடர்ந்தே சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் மூலம் சினிமாவில் காலடி வைத்த அவருக்கு, முதலில் சிறிய காதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது முதலே நடிக்கும் கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தை பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
 
வசன உச்சரிப்பு, ஸ்டைலான மேனரிசம் என தனி அடையாளத்துடன் வலம் வர தொடங்கிய ரஜினிகாந்த், பைரவி திரைப்படம் மூலமாக நாயகன் ஆனார். எளிய நடிகராக சினிமாவில் அறிமுகமாகி முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் தனித்துவமான அடையாளத்தை நிறுவினார்.
 
அழுத்தமான கதாபாத்திரங்களை தொடர்ந்து பில்லா, முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் மாஸ் ஹீரோவாக மாறத் தொடங்கினார். அதுவே, ரஜினியின் அடையாளமாக மாறத் தொடங்கியது.
 
அழுத்தமான கதைக்களம், ஆக்ஷன் என பயணித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தால் முழுநீள நகைச்சுவைப் படத்திலும் நடித்து அசத்த முடியும் என நிரூபித்த திரைப்படம் தில்லு முல்லு. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இப்போதும் பெரும் வரவேற்புண்டு.
 
ஒருகட்டத்திற்குப் பிறகு ரஜினி நடித்ததெல்லாம் வெற்றி எனும் நிலை உருவானது. எஜமான், தளபதி, அண்ணாமலை, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்த அவர் படங்களின் வெற்றி வசூல் மன்னனாக அவரை உருவெடுக்க வைத்தது. இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் அசராமல் எழுந்து வெற்றிப் பயணத்தைத் தொடர அவர் ஒருபோதும் தவறியதே இல்லை. அதனால்தான், எந்திரன், கபாலி, 2 பாயிண்ட் ஓ, பேட்ட, அண்ணாத்த என அவரது படங்கள் இப்போதும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.
 
கருப்பு - வெள்ளை, கலர், அனிமேஷன், 3-டி என மாறும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு பயணிப்பதால்தான், தாதா சாகேப் பால்கே விருது எனும் கெளவரத்தைப் பெற்றதோடு, சினிமாவில் 45 ஆண்டுகளைக் கடந்தும் ரஜினிகாந்தை தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக ஒளிர வைத்துக் கொண்டிருக்கிறது.
 
Source : www.puthiyathalaimurai.com