இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில் கரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.