தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.
ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார். இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.