web log free
May 04, 2024

லதா மங்கேஷ்கர் பாடிய தமிழ் பாடல்கள்

இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

லதா மங்கேஷ்கர் தமிழில் பாடல்கள் பாடியுள்ளார். 1952-ம் ஆண்டு வெளியான இந்தி படமான ‘ஆன்’ தமிழில் ‘ஆன் முரட்டு அடியாள்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் லதாமங்கேஷ்கர் 4 பாடல்களை பாடி இருந்தார். 1955-ம் ஆண்டு இந்தி படமான ‘உரன் கடோலா’ தமிழில் ‘வன ரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் ‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை பாடி இருந்தார்.

அதன்பின் 1987-ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் நேரடியாக தமிழ் படத்தில் பாடல்கள் பாடினார். இளையராஜா இசையில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை பாடினார். இந்த பாடல் பிரபலமானது. 1988-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை....கலகலவென’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடினார். அதே ஆண்டு கார்த்திக் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பாடி இருந்தார்.

தமிழில் லதா மங்கேஷ்கர் நேரடியாக பாடிய பாடல்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்துள்ளார். இந்தியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல்வேறு படங்களில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார்.