ஆஸ்திரேலியாவின் அபோரிஜினல் இனத்தை சேர்ந்த குவேடன் பெயில்ஸ், தான் கிண்டல் செய்யப்படுவதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அழுத வீடியோவை அவரது தாய் பதிவேற்றி இருந்தார்.
சித்திரக் குள்ளராக இருக்கும் அவர் தன் உருவத்தால் கிண்டலுக்கு உள்ளாவதாகவும், வாழப்பிடிக்கவில்லை என்றும் அந்த காணொளியில் கூறி அழுது இருந்தார்.
அதே சிறுவன், பழங்குடிகள் பங்கேற்ற ரக்பி போட்டிகளில் `Indigenous All Stars` அணிக்கு தலைமை தாங்கினார்.
ஒருநாள் மிகப் பெரிய ரக்பி வீரராக வேண்டும் என்பது குவேடனின் வாழ்நாள் கனவு என்று அவரது தாய் யாரகா பெயில்ஸ் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் தேசிய பழங்குடிகள் ரக்பி அணி, குவேடனை தங்கள் அணிக்கு தலைமை தாங்க அழைப்பு விடுத்திருந்தது.
அந்த அணியின் ரபிட்டோ லாட்ரல் மிட்செல் குவேடனுக்கு அழைப்பு விடுத்து வெளியிட்டிருந்த காணொளியில், "உனக்கு நாங்கள் இருக்கிறோம்… நீ நலமாக இருக்கிறாயா என்று எங்களுக்கு தெரிய வேண்டும். இந்த வார இறுதியில் நாங்கள் விளையாட உள்ள ரக்பி போட்டிக்கு நீ தலைமை தாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.
அழைப்பை ஏற்று மைதானத்திற்கு வந்த குவேடன், அங்கு மக்களின் ஆரவாரத்துடன், அணியின் கேப்டன் ஜோயல் தாம்சனின் கையை பிடித்தவாறு வீரர்களை வழிநடத்தி சென்றார்.
பின்னர் ரக்பி பந்தை கையில் பிடித்தவாறு அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட குவேடன், பின்னர் பந்தை நடுவரிடம் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குவேடனின் தாய் யாரகா, "அவன் வாழ்வின் மோசமான நாளை தொடர்ந்து, அவன் வாழ்க்கையின் சிறந்த நாளுக்கு சென்றுள்ளான்" என்று தெரிவித்தார்.