கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் சுதந்திர உணர்வை உணர்ந்துள்ளதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் டெல்லியில் உள்ள தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜோர்டனில் சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டியில் கலந்து கொண்டுவிட்டு தாயகம் திரும்பியதில் இருந்து மேரி கோம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் மேரி கோம் கூறியிருப்தாவது:
வீட்டிலேயே உடற் பயிற்சிகளைசெய்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என் குழந்தைகளிடமிருந்து விலகி இருந்தபின் தற்போது அவர்களுடன் விளையாடுகிறேன். இந்த தனிமைப்படுத்தலின் மிகச் சிறந்த பகுதி என்னவென்றால் நான் எதையும் யோசிக்காமல் நாள் முழுவதும் என் குடும்பத்தினருடன் இருப்பதுதான். எல்லோரிடமும் எனது வேண்டுகோள் என்னவெனில் பீதி அடைய வேண்டாம், உங்களால் முடிந்தால் வீட்டிலேயே தங்க முயற்சி செய்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.
என் விஷயத்தில், இந்த தனிமைப்படுத்தலுடன் நான் சுதந்திர உணர்வை உணர்ந்து உள்ளேன். அன்றாட பணிகளின் மன அழுத்தத்தை நான் இப்போது உணரவில்லை. இப்போதைக்கு எனது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 10 முதல் 15 நாட்கள் அவர்கள் என்னுடன் இருப்பார்கள், அதுவும் எந்தவித இடையூறும் இல்லாமல்.
எனது குழந்தைகள் அப்பாவித்தனமாக இந்த வைரஸ் அப்படியே தங்கிடுமா? என கேட்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் பள்ளிகள் இல்லாததால் வீட்டில் இருந்து விளையாடுவதை மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த வைரஸ் எவ்வளவு தீவிரமானது என்பது எனக்கு தெரியும். இது ஒரு அபாயகரமான சூழ்நிலை. அனைவரும் சுகாதாரவழிகாட்டுதல்களை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். முக்கிமான இதை அனைவரும் செய்ய வேண்டும்.
ஒலிம்பிக் போட்டி...
நம்மை காப்பாற்றிக் கொள்ளஅதுதான் ஒரே வழி. அனைவரும்கவனமாக இருக்க வேண்டும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக என்னை வந்து சந்திப்பதற்கு யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் எனநான் நினைக்கவில்லை. பெரியவிளையாட்டு நிகழ்வை மாற்றுவது என்பது எளிதல்ல. இது குழப்பத்தை ஏற்படுத்தும். எப்படி இருந்தாலும் அது என் கைகளில் இல்லை.
பயணக்கட்டுப்பாடுகள் உள்ளதால் பயிற்சி விஷயங்களில் சில திட்டமிடல்கள் தேவை. இதுவரை எனது மனதில் அந்த எண்ணம் உருவாகவில்லை. தற்போதைக்கு இங்கு பயிற்சி சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. எதையும் இழக்கவில்லை. பயிற்சிக்காக வெளிநாடு செல்வதை முடிவு செய்தவற்கு முன்னர் அடுத்த இரு வாரங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அதுவரை அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். கைகளை கழுவ மறக்காதீர்கள்.