அனுஷ்கா சர்மாவுடனான காதல் பற்றி மனம் திறந்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
கால்பந்து வீரர் சுனில் சேத்ரியுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கூறியதாவது:
அனுஷ்கா சர்மாவைச் சந்திக்கும் முன்பு என் வாழ்க்கையில் எனக்குச் செளகரியமாக இருக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கும்போது அவருக்காக நிறைய செய்ய ஆசைப்படுவீர்கள். மனம் திறந்து பேசவேண்டும். இருவருடனான உரையாடலில் உங்களைப் பற்றி மட்டும் பேச முடியாது. இருவருக்கான விஷயங்கள் தான் அதில் இருக்கும். இதைத்தான் என் வாழ்க்கையில் நுழைந்த பிறகு எனக்குக் கற்றுக் கொடுத்தார் அனுஷ்கா சர்மா.
இப்போது உள்ளதுபோல நான் இருந்ததில்லை. எல்லோரிடமும் இரக்கக் குணம் இருக்கும். ஆனால் அதை இன்னொருவர் வந்து தான் வெளிப்படுத்துவார். அனுஷ்காவைச் சந்தித்த பிறகு தான் என்னைப் பற்றி மட்டுமே எண்ணுவது வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்தேன். அனுஷ்காவினால் என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையை இன்னும் சிறப்பாக அமைத்துக் கொண்டேன். யாராவது என்னிடம் ஒரு பிரச்னைக்காக வந்தால், என்னால் அதைச் சரி செய்ய முடியும் என்றால், நிச்சயம் செய்வேன்.
நாங்கள் காதலைச் சொல்லிக் கொள்ளவேயில்லை. வாழ்க்கையே காதலாக மாறும்போது, காதலர் தினத்தைத் தனியாகக் கொண்டாட வேண்டியதில்லை. காதலிக்கும்போதே நாங்கள் இருவரும் நிச்சயம் திருமணம் செய்துகொள்வோம் என்பதில் உறுதியாக இருந்தோம். இருவரும் இணைந்து வாழ்வதில் ஆர்வமாக இருந்தோம். எல்லாமே இயல்பாக நடந்தது என்றார்.