காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16ஆம் திகதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதிலில் ‘கிரிக்கெட் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன்.
இது சர்வதேச கிரிக்கெட் தொடர். இதில் விளையாடுவதா? வேண்டாமா? என்பதை இந்திய கிரிக்கெட் சபையும் சர்வதேச கிரிக்கெட் சபையும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு மற்றும் நிலைமைக்கு தக்கபடி இறுதி முடிவை மேற்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.
ஐ.சி.சி. கூட்டம் வருகிற 27ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதிவரை டுபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.