அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் வன்’ வீரர் நோவக் ஜோகோவிச் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
முதல் செட்டை டைபிரேக்கரில் கோட்டை விட்ட ஜோகோவிச் அதன் பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்ததுடன் அடுத்த 3 செட்களையும் சொந்தமாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபித்தார்.
3 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை துரத்தியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், 29-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை சந்திக்கிறார்.