கிளிநொச்சி ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டியில் யுனைட்டெட் அணி சம்பியானாகியுள்ளது. இந்தப் போட்டிகள் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்றிருந்தது.
12 அணிகள் பங்குபற்றிய இந்தப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் தர்மபுரம் இளந்தாரகை அணியை யுனைட்டெட் அணி 4 ஓட்டங்களால் தோற்கடித்தது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யுனைட்டெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இளந்தாரகை அணி 20ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
4 ஆவது தடவையாக கிளிநொச்சி ப்ரீமியர் லீக் போட்டிகளை அகிலன் பவுண்டேசனின் பூரண அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட மாவட்ட துடுப்பாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தின் துடுப்பாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 12 கழகங்களுக்கு இடையே இந்த போட்டி நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றிருந்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.
கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் வடக்கு மாகாண இளையோர் துடுப்பாட்ட தெரிவாளர் நிசாந்தன் உள்ளிட்ட மேலும் பலர் இப்போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.