கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (17) தெரிவித்தார்.
இலங்கை, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டுகள் பூர்த்தி விழாவை முன்னிட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக அலரி மாளிகையில் இடம்பெற்ற உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்தது.
1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிய பதக்கங்கள் இவ்வளவு காலமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்பட்ட நிலையில், அப்பதக்கங்கள் பிரதமரின் கரங்களினால் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டு விழாவை முன்னிட்டு QR குறியீட்டுடனான முதலாவது நினைவு முத்திரை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் வழங்கப்பட்டதுடன், அவர்களினால் கௌரவ பிரதமர் மற்றும் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க உரையாற்றுகையில்,
சர்வதேசத்தின் மத்தியில் நாம் பிரபலமடையாத காலத்திலும் பிரதமர் அவர்கள் எமது கிரிக்கெட் அணி சார்பாக செயற்பட்டமை எமக்கு நினைவிருக்கிறது. நாம் ஒரு அணி என்ற ரீதியில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 25 ஆண்டுகள் கடந்தும் இந்நாடு எம்மை மறக்கவில்லை.
எங்களுக்குள் நிர்வாக சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் சிரேஷ்ட வீரர்களாகிய நாங்கள் இளம் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த காலத்தில் கிரிக்கெட்டுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் முறையான நிர்வாகத்துடன் இந்நாட்டில் கிரிக்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிபெறும் போது அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ.திசாநாயக்க, அப்போதைய விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க, கிரிக்கெட் தலைவர் (1996) ஆனா புஞ்சிஹேவா, இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள், உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட கிரிக்கெட் அணியின் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.