அக்டோபா் 8 ஆம் திகதி லீக் சுற்றின் கடைசி இரு ஆட்டங்களை இரவு 7.30 க்கு நடத்த IPL நிா்வாகம் முடிவு செய்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது, கணிப்பு மற்றும் கணக்கியல் ரீதியாக எந்த அணிக்கும் சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
IPL ல் இவ்வாறு ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெறுவது இது முதல் முறை. அதில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
IPL போட்டியில் புதிதாக இணையும் இரு அணிகள் குறித்த அறிவிப்பு அக்டோபா் 25 ஆம் திகதி வெளியாகிறது. அன்றைய தினமே, 2023 முதல் 2027 காலகட்டத்துக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் கோருவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் வரவேற்கப்பட இருக்கின்றன.
தற்போதைய ஒளிபரப்பு உரிமம் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் வசம் உள்ளது. எதிா்வரும் ஏலத்தில் அந்த நிறுவனத்துடன் சோ்ந்து, சமீபத்தில் ஒன்றாக இணைந்த சோனி - ஜீ தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட்டாக பங்கேற்கும் எனத் தெரிகிறது.
IPL போட்டியின் குவாலிஃபயா் 2 மற்றும் இறுதி ஆட்டம் ஆகியவற்றைக் காண ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தருமாறு மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவா்கள், செயலா்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.