கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் புதன்கிழமை நிறைவடைந்த 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 170 புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் ஏழாவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனானது.
இவ் விளையாட்டு விழாவில் 102 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு மாவட்டம் 2 ஆம் இடத்தையும் 93 புள்ளிகளைப் பெற்ற கண்டி மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பெற்றன.
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளையோர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதான நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இருபாலாருக்கும் 20 வயதுக்குட்பட்ட, 20 வயதுக்குமேற்பட்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 11 விளையாட்டு விழா சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.27 செக்கன்களில் நிறைவு செய்து புதிய சாதனை நிலைநாட்டிய குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கௌஷல்ய டயஸ் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 56.00 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய சாதனை நிலைநாட்டிய கம்பஹா மாவட்டத்தைச் செர்ந்த சயுரி லக்ஷிமா மெண்டிஸ் அதிசிறந்த பெண் மெய்வல்லநர் விருதை வென்றெடுத்தார்.