இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். 100 ஆவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. நிசான்கா (26) மற்றும் அசலன்கா (1) இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறிய இலங்கை அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இலங்கை அணியில் பதுன் நிஷாங்கா(61) ஒருபுறம் போராட, மற்ற பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். இறுதியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இழந்தது. இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் ஜொலித்த ஜடேஜா பந்துவீச்சிலும் தனது மாயாஜாலத்தை காட்டினார். அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால், முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 400 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி பாலோ ஆன் ஆனதால், மறுபடியும் தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.