12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது.
ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டனர்.
பஞ்சாப் அணியில் சாம் குர்ரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரகுமான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.
நாணய சுழற்சியில் ஜெயித்த ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்தது. அஸ்வின் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 183 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி ஸ்ரேயாஸ் கோபாலின் (0) விக்கெட்டை பறிகொடுத்து 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி சந்தித்த 6-வது தோல்வியாகும். இந்த சீசனில் 2-வது முறையாக பஞ்சாப்பிடம் தோற்று இருக்கிறது.