கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தலைவர் விராட் கோலி தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது.
மொயீன் அலி ஒத்துழைப்புடன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். கடைசியில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ஓட்டங்களில் வெளியேறினார். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள ஐந்தாவது சதம் இதுவாகும்.
இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.
ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்லுக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். #IPL2019 #ViratKohli