– CID நீதிமன்றத்தில் தகவல்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்புடையதாகக் கூறப்படும் ‘க்ரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை விவகாரம் தொடர்பான விசாரணையில், இலங்கையில் ரூ.188 மில்லியன் மதிப்பிலான சொத்து ஒன்று கொள்வனவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தின் (Transworks Square) 4.3 ஏக்கர் காணியை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கிய விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்த தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 9ஆம் திகதி CID இந்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU) சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, இந்த பரிவர்த்தனையுடன் தொடர்புடைய கணிசமான வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் இலங்கையிலுள்ள வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதில், ஜெர்மனியிலுள்ள வங்கியொன்றிலிருந்து 1.2 மில்லியன் யூரோவும், அவுஸ்திரேலிய வங்கியொன்றிலிருந்து 1,497,446 யூரோவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிதி ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மருத்துவமனைத் திட்டங்களை நிறுவும் பெயரில் மாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் CID நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.




