தம்புள்ளை பொருளாதார மொத்தச் சந்தைக்கு வரும் காய்கறி விநியோகம் சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள விசேட பொருளாதார மொத்தச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் மற்றும் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்ததோடு, விவசாயிகளுக்கு உரிய முறையில் உரம் கிடைக்காததே இதற்கான முக்கிய காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தினசரி சுமார் 6 இலட்சம் கிலோகிராம் காய்கறிகள் சந்தைக்கு வந்த நிலையில், தற்போது அது 4 இலட்சம் கிலோகிராம் அளவுக்கு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்த விலை சில அளவில் குறைந்திருந்தாலும், மிளகாய் ஒரு கிலோவிற்கு ரூ.500–550 என்ற உயர்ந்த மொத்த விலை பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு கிலோ கரட் ரூ.230–250, கத்தரிக்காய் ரூ.350, முருங்கைக்காய் ரூ.150–200, பூசணிக்காய் ரூ.115, வெண்டைக்காய் ரூ.60–70, லீக்ஸ் ரூ.200 மற்றும் வெட்டக்காளு ரூ.170 என்ற மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் காய்கறி மொத்தக் கொள்வனவாளர்கள் மற்றும் நடமாடும் விற்பனையாளர்கள் வழக்கம்போல சந்தைக்கு வந்ததாகவும், சந்தைக்கு வந்த காய்கறிகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகியதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.




