முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், “ஒருவர் தனது சொந்த வழக்கில் தாமே நீதிபதியாக இருக்க முடியாது” என்பது சட்ட அமைப்பு தோன்றிய காலம் முதல் மதிக்கப்பட்டு வரும் அடிப்படை நீதிக் கொள்கை என தெரிவித்துள்ளார்.
அதன்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாக்கலை பரிசீலிக்கும் அதிகாரம், அந்தச் சட்டத்தால் நேரடியாக நன்மை அடையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கக் கூடாது என்றும், அந்த விடயம் அதற்கு மேல் உள்ள ஒரு நீதித்துறை அமைப்பின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்றும், உச்ச நீதிமன்றத்தை விட உயர்ந்த அதிகாரம் கொண்ட மக்களின் நீதிமன்றமான மக்கள் தீர்ப்புக்கு உட்படுத்தி, அதற்காக பொதுமக்கள் வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக அரசு முன்வைக்கும் காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருக்கும் பிரச்சினைக்கும், இந்தத் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தற்போது எட்டு நீதிபதி காலியிடங்கள் இருந்தபோதிலும், அவற்றை நிரப்ப இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கும் முரணானது என்றும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், அதற்கு மக்களின் நேரடி ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் வலியுறுத்தினார்.
ஏகாபத்திய எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.




