2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது.
கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.
இது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் இலங்கை வெல்லும் 6ஆவது தங்கப் பதக்கமாகும்.
2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இலங்கை வெல்லும் முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார்.
அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கம் நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமிதம்! ருமேஷ் தரங்க உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.




