தற்போது நாட்டில் கடும் காணி பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான 12,000 ஏக்கர் வரையிலான பாரிய அளவிலான நிந்தகம்கள் இருப்பதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு தேவாலயத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆயிரக்கணக்கான ஏக்கர் என்பது இந்த விடயத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய அளவாகும்.
இரத்தினபுரி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள விகாரைகளுக்கு 8,500 ஏக்கர் முதல் 12,000 ஏக்கர் வரையிலான நிந்தகம்கள் இந்தச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதனால்தான் நான் இதற்கு முன்னரும் இந்த விடயத்தை முன்வைத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் பதிலளிக்கும்போதும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி வருகின்றேன்.
நாம் தற்போது கடுமையான காணி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றோம். மக்களுக்கு குடியிருப்புகளை அமைப்பதற்குக்கூட காணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 10,000 முதல் 12,000 ஏக்கர் வரையிலான காணிகள் இவ்வாறான தேவாலயங்கள் மற்றும் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனில், விகாரை தேவாலகம்ஸ் சட்டத்தை (Vihara Devalagam Act) மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும்.”
பண்டைய காலங்களில் மன்னர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு காணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், பின்னர் அந்தக் காணிகளில் மக்கள் குடியேற்றம் இடம்பெற்றதன் காரணமாக உரிமை தொடர்பான பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கும் தீர்வுகள் என்ன என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.




