அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில்துறை தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் இலக்கம் 2 மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலை) ஒழுங்குமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஒழுங்குமுறையின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டை அணிவது கட்டாயமாகும். மேலும், இருக்கைப் பட்டை இல்லாத வாகனங்களில் அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த ஆரம்பகட்ட சலுகைக் காலம் 2026 ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.
எனினும், வாகன உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர், 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட இலக்கம் 2493/19 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த சலுகைக் காலம் 2026 செப்டம்பர் 19 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.




