– அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ விரும்பிய மாத்திரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கான சட்டரீதியான தடைகளை நீக்கி எல்லை நிர்ணயப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பித்து அவற்றை மக்களின் பார்வைக்கு திறந்துவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களை விளக்கிய அமைச்சர், தேர்தலை நடத்துவதற்கு முதலில் உரிய சட்டங்களும் விதிமுறைகளும் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், எல்லை நிர்ணயப் பணிகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேற்படி சட்டரீதியான கட்டமைப்பு தயாரானவுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.




