– பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க
வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் ஆணைகளில் ஒன்றை வழங்கி தற்போதைய அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தது நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே என பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளிலும் தற்போதைய ஆட்சி தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கொண்ட பெரும்பான்மையை மக்கள் வழங்கியது ஊழல் நிறைந்த ஆட்சிக் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய ஊழல் மற்றும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு அவர்களின் பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியினர் கடும் அச்சமடைந்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த ஆட்சிக்கும் நாட்டில் இடமிருக்காது என ருவன் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.




