– வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிகக் கட்டணத்தை (Customs Surcharge) எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் ரூ.50 இலட்சம் வரை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மேலதிகக் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் நேரடி தாக்கம் மே 15ஆம் திகதிக்குப் பின்னர் கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் எனவும் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
தற்போது விற்பனை நிலையங்களில் உள்ள பெரும்பாலான வாகனங்களுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னரே கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால், தற்போதைய விலையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் விலை அதிகரிப்புகள்:
•Wagon R – சுமார் ரூ.5 இலட்சம்
•Toyota Raize – சுமார் ரூ.10 இலட்சம்
•Vezel – ரூ.15–20 இலட்சம்
•Prado – சுமார் ரூ.30 இலட்சம்
•Land Cruiser – சுமார் ரூ.50 இலட்சம்
•Double Cab – ரூ.20–25 இலட்சம்
அடிக்கடி இவ்வாறு சுங்க மேலதிகக் கட்டணங்களில் மாற்றங்களை மேற்கொள்வது வாகன சந்தையை நிலையற்றதாக மாற்றும் என பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க விரும்பினால், சுங்க வரிக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்வது அல்லது கடன் கடிதங்களை கட்டுப்படுத்துவது போன்ற மாற்று வழிமுறைகளை பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




