பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகப் பாடநெறிகளை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வகையான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுப்பது தொடர்பான “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேராசிரியர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒருவர் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கு காரணம், அதன்மூலம் கிடைக்கும் ஒருவிதமான இன்பம் அல்லது வேறு காரணம் மட்டுமல்ல எனவும், போதைப்பொருள் பாவனையை நிறுத்தும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை (Withdrawal Symptoms) கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையே அதற்கான முக்கிய காரணமாகும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக போதைப்பொருளைப் பயன்படுத்துவதன் காரணமாக உடலில் ஏற்படும் இந்த விலகல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையினால், மாணவர்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்படுவதாக அமில இசுரு மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தற்போதைய நிலைமையில் நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருளுக்கு பழக்கப்படுத்துவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும், பல்கலைக்கழக கட்டமைப்பிலும் மாணவர்களை போதைப்பொருளுக்கு பழக்கப்படுத்துதல் மற்றும் அவர்கள் போதைப்பொருளுக்கு பழகுவதற்கான உயர் போக்கு நிலவுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




