தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி கருத்து தெரிவித்தார்.
72 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில், பெண்கள் சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் பிரசார நடவடிக்கை தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு தயார்படுத்தலும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
அவ்வாறான நிலையில், தேசிய மக்கள் சக்தி ஏன் இவ்வாறான பிரசார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கிறது என்பது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“தற்போதைய அரசியலில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீர போன்றவர்கள் புதிதாக அரசியல் கட்சிகளை உருவாக்கியிருந்தாலும், அது பலமான எதிர்க்கட்சி அல்ல. மாறாக, சிறிய கட்சிகளின் கூட்டணியாகவே உள்ளது.”
தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.




