உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும் பிரதேசங்களும் மாற்றமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு நீர்நிலைகள் வறண்டு போனால், நாட்டின் ஒட்டுமொத்த நன்னீர் மீன் வளமும் அழிவடையக்கூடும் என்பதால், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) இது தொடர்பான ஆய்வொன்றை தற்போது ஆரம்பித்துள்ளது.
எல்-நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக NARA நிறுவனம் ஐந்து குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி லலித் அமரலால் தெரிவித்துள்ளார்.
எல்-நினோ நிலைமையால் இலங்கையின் கடல் மற்றும் மீன் அறுவடைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து துல்லியமாகக் கூற முடிவது, குறித்த ஆய்வின் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடலின் வெப்பநிலை, அலை மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஆய்வுக்குத் தேவையான தரவுகளை NARA நிறுவனம் தற்போது சேகரிக்கத் தொடங்கியுள்ளது. குறித்த ஆய்வை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் NARA தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆழம் குறைந்த கடற்பகுதிகளில், இலங்கையின் தெற்கு, மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஒரு நாள் அடிப்படையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், பருவகால கடல் நிலைமைகள் காரணமாக தற்போது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.




