இலங்கையின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னணியில் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த அரசியல் தலையீடு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நடவடிக்கையின் கீழ், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை ஒழிப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
குறிப்பாக நேபாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பெருமளவான சிவப்பு அறிவிப்புகள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை இதுவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏனைய போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும், அதன் விநியோக வலையமைப்பின் பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் காரணமாக அந்த நடவடிக்கைகள் வெற்றியடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போதைய நிலையில் எந்தவித அரசியல் பாகுபாடுமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்தார்.




