திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) ஒதுக்கப்பட்டுள்ள 24 எண்ணெய் தொட்டிகளில் இரண்டு தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் மயூர நெத்திக்குமாரகே தெரிவிக்கையில், குறித்த தொட்டிகளின் செயற்பாட்டுத் திறன் மற்றும் பயன்படுத்தக்கூடிய நிலையை பரிசோதிக்கும் நோக்கில், பரீட்சார்த்த அடிப்படையில் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த இரண்டு தொட்டிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள தொட்டிகளை புனரமைப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளர், மேலும் மூன்று எண்ணெய் தொட்டிகளை புனரமைப்பதற்கான கேள்விப்பத்திர (டெண்டர்) செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அது கேள்விப்பத்திர மதிப்பீட்டு கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“மேலும் மூன்று தொட்டிகளுக்கான டெண்டர் செயல்முறையை நாம் ஆரம்பித்துள்ளோம். அவற்றின் பணிகள் நிறைவடைந்த பின்னர் மொத்தம் ஐந்து தொட்டிகளின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்திருப்போம். மீதமுள்ள 19 தொட்டிகளும் பல கட்டங்களின் கீழ் இதே முறையில் அபிவிருத்தி செய்யப்படும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அடுத்த மூன்று எண்ணெய் தொட்டிகளின் புனரமைப்புப் பணிகளுக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் தொட்டி அபிவிருத்திப் பணிகளுக்கு இணையாக, திருகோணமலை துறைமுகத்தில் புதிய ஜெட்டி ஒன்றை அமைக்கும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இரண்டு தொட்டிகளிலும், எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மூன்று தொட்டிகளிலும் வர்த்தக நடவடிக்கைகள் புதிய ஜெட்டியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னரே ஆரம்பிக்கப்படும் என டாக்டர் நெத்திக்குமாரகே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஐந்து எண்ணெய் தொட்டிகளும் பிரதானமாக வெளிநாடுகளுக்கு பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப உள்நாட்டு சந்தைக்கு எரிபொருளை விநியோகிக்கவும் அவற்றைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாக அபிவிருத்தித் திட்டம்
2022 ஜனவரி 4ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மொத்தம் 99 எண்ணெய் தொட்டிகளில் 24 தொட்டிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும், 14 தொட்டிகளை Lanka IOC நிறுவனத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மீதமுள்ள 61 எண்ணெய் தொட்டிகள் Trinco Petroleum Terminal (TPTL) நிறுவனத்திற்கு 50 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக 51% பங்குகளுடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளது.




