அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியர் மற்றும் பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசா கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், தற்காலிக குடியேறிகள் வேறு வகையான விசாக்களுக்கு மாறுவதைத் தடுக்கும் வகையிலும் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், தேசிய பத்திரிகையாளர் கழகத்தில் இன்று நடைபெறும் விசேட உரையின்போது இந்த புதிய நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆண்டுக்கு சுமார் 300,000 ஆக உள்ள நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை, 2028ஆம் ஆண்டளவில் 225,000 ஆகக் குறைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி, சர்வதேச மாணவர்களின் துணைவர்கள் அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கும், 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய திருத்தங்களின் மூலம் இந்த வசதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
அதிகரித்து வரும் குடியேற்றம் காரணமாக நாட்டில் வீட்டு வசதி நெருக்கடி மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீவிர வலதுசாரி One Nation கட்சி, அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை 750,000ஆல் குறைக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளது.
குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் அரசியல் அழுத்தமும் இந்த புதிய நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




