இலங்கையில் இன்ஃப்ளூயன்சா A H1N1 தொற்றின் அண்மைக்கால அதிகரிப்பு பதிவாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) தேசிய இன்ஃப்ளூயன்சா மையம் தெரிவித்துள்ளது.
தேசிய இன்ஃப்ளூயன்சா மையத்தின் ஆய்வக கண்காணிப்பில் H1N1 தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆலோசகர் வைரஸ் நிபுணர் வைத்தியர் கிரிஷான் ஜூட் ஜயமஹ தெரிவித்தார்.
காய்ச்சல், உடல் வலி அல்லது இன்ஃப்ளூயன்சா தொடர்பான ஏனைய அறிகுறிகள் ஏற்பட்டால், சுயமாக மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியமானது என வைத்தியர் ஜயமஹ சுட்டிக்காட்டினார். அதேபோன்று, இன்ஃப்ளூயன்சா அறிகுறிகள் உள்ளவர்கள் வலி நிவாரணிகள் உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்தும்போதும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஃப்ளூயன்சா தொடர்பான சிக்கல்களுக்கு அதிக ஆபத்துள்ள குழுக்களாகக் கருதப்படுகின்றனர். எனவே, இவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்சாவின் அறிகுறிகள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் ஒத்திருக்கக்கூடும் என்பதால், அது தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
பொதுவாக இன்ஃப்ளூயன்சா தொற்றின்போது காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, உடல் வலி மற்றும் அதிகளவான சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் அல்லது நிலைமை மோசமடைந்தால், குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம், கடுமையான பலவீனம் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




