எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம்,
“நாங்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்கத் தயாராக இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமகி ஜன பலவேகய, எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகள் இதில் பங்கேற்கக் கூடாது என பகிரங்கமாக அறிவித்தது.
இவ்வாறான சூழ்நிலையில் எமது சுயமரியாதையைப் பேணிக்கொண்டு அங்கு செல்ல முடியாது. எனினும், இது எதிர்க்கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கையாக அல்லாமல், முழு நாட்டினதும் எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இது சமகி ஜன பலவேகயவின் எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்கக் கூடாது. எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பு நடவடிக்கை வெற்றியடைய வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சமகி ஜன பலவேகயவில் நடைபெற்ற கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளியே வந்து ஒரு கருத்தைத் தெரிவித்தார். அந்தக் கருத்துக்கு எதிராக இதுவரை எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரோ கருத்து தெரிவிக்கவில்லை. அந்தக் கருத்தை கண்டிக்கவோ அல்லது அது தவறானது என தெரிவிக்கவோ இல்லை.
இதன் மூலம், இது சஜித் பிரேமதாசவின் தேவையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கருத்தாக இருக்கலாம் என எங்களுக்குத் தோன்றுகிறது.
எனவே, சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா என்ற விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியான எங்களுக்கு சிறிய சந்தேகம் உள்ளது. ஏனெனில், அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது” என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.




