2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 6ஆம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2026ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கத் தொடங்கப்பட்ட இந்த புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, அதன் கொள்கைகளுக்கு அமைவாக 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு 2026ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும், 10ஆம் வகுப்பு முதல் தொழில்சார் பாடங்களை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் கருத்தாக்க ஆவணம் ஆகியவை அண்மையில் நாடாளுமன்ற உபகுழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தின்படி, 6ஆம் வகுப்பிற்கான பாடத்திட்ட மறுசீரமைப்பை 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க இறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.




