ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டனைக் காலத்தில் குறைந்தது பாதி காலம் நிறைவடையும் வரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதைத் தவிர்க்குமாறு எதிர்காலத்தில் பதவியேற்கும் ஜனாதிபதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
நேற்று (07) டாக்டர் என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படுவதன் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளும் அளவற்ற முயற்சிகள், சட்டத்தரணிகளின் பங்களிப்பு மற்றும் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் ஏற்கும் பாரிய நிதிச் செலவு ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போது தன்னை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறான பிரசாரங்கள் குறித்தும் சந்தியா எக்னலிகொட இதன்போது வெளிப்படுத்தினார்.
தற்போது தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள், குறித்த தேரர் 2018ஆம் ஆண்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தைக் காட்டிலும் மிகவும் தீவிரமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தான் ஒரு பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் எனக் கூறி முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தியா எக்னலிகொட திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அத்தகைய குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருப்பின், அதனை நீதிமன்றத்தின் முன்னிலையில் நிரூபிக்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.




