நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள், பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும் அமைச்சின் பயன்பாட்டிற்கு அவசியமற்றவை என்றும் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், அவற்றில் 23 வாகனங்கள், அதாவது 59 சதவீதமானவை, பெரும் செலவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2024 டிசம்பர் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கைக்கு அமைய, அமைச்சின் செயலாளரால் சொகுசு வாகனங்களை அகற்றுவதற்காக அடையாளம் காணும் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழுவினால் அமைச்சுக்குச் சொந்தமான 39 வாகனங்கள், பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும் அமைச்சின் பயன்பாட்டிற்கு அவசியமற்ற சொகுசு வாகனங்கள் என்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.
எனினும், அவற்றில் 23 வாகனங்கள் தொடர்ந்து அமைச்சினால் பயன்படுத்தப்பட்டு வருவதால், குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாகவும் கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், வரி விலக்கு அடிப்படையிலோ அல்லது வேறு விசேட நிபந்தனைகளின் கீழோ இறக்குமதி செய்யப்பட்ட 13 வாகனங்கள், அவற்றுக்குரிய நிபந்தனைகளை முறையாக நீக்கிக்கொள்ளாமல் அகற்றும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அமைச்சுக்கு 5,513,873 ரூபாய் (55 இலட்சத்து 13 ஆயிரத்து 873 ரூபாய்) நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




