இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற அரச நில அளவைத் திணைக்கள சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்படக்கூடிய பொருளாதார அதிர்வுகளை எதிர்கொள்வதற்குப் போதுமான ரூபாய் நிதி காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிப்புற அதிர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறைசேரிக்குக் கிடைக்கும் நிதியை அடிமட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரச சேவையின் பொறுப்பாகும். இதற்காக வலுவான அரச பொறிமுறையொன்று அவசியம் எனவும், தற்போதைய அரசாங்கம் அதனை உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையின் அரச சேவை கவர்ச்சிகரமானதாக இல்லாததால் பலர் அதிலிருந்து வெளியேறுவதாகவும், தொழில்முறை நிபுணர்களைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய அரச சேவை முறைமை இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், 2027ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால், தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2028ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும், அந்த ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரச சேவையில் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்முறை அரச சேவையில் பல வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அரசியல் நியமனங்கள் காரணமாக அரச சேவையின் கீழ்மட்டப் பதவிகள் நிரம்பியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, சில அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சில நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.




